search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகி ஆதித்யாநாத்"

    உத்தர பிரதேச அமைச்சரவையில் இருந்து சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ராஜ்பர் நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரையின்படி கவர்னர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் இடம்பெற்றிருந்தது. அந்த கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அக்கட்சியைச் சேர்ந்த மேலும்  சில எம்எல்ஏக்கள் இணை அமைச்சர்களாக பொறுப்பில் இருந்தனர்.

    இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபகாலமாக பாஜகவை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என சமீத்தில் பேசினார். அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் கூறி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.



    இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பரை தனது அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பரிந்துரை செய்தார். இதேபோல் இணை அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவிகளில் இருக்கும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் உடனடியாக நீக்க பரிந்துரை செய்தார்.

    இந்த பரிந்துரையை கவர்னர் ராம் நாயக் ஏற்றுக்கொண்டு, ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இதேபோல் அக்கட்சியின் பிற உறுப்பினர்களும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
    ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியாக இருக்கும் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது வெட்கக்கேடான செயல் என்று மேற்கு வங்காளத்தில் இன்று பேசிய யோகி ஆதித்யாநாத் குறிப்பிட்டார். #Mamatasavingcorrupt #YogiAdityanath
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகின்றனர். அவ்வகையில், மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் இன்று நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
     
    இதற்காக யோகி ஆதித்யநாத் உ.பி.யில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புருலியா செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ நகர் வரை ஹெலிகாப்டரில் சென்று, அங்கிருந்து காரில் புருலியா செல்ல முடிவு செய்தார் யோகி.

    அதன்படி, இன்று பிற்பகல் உ.பி.யில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். 3.40 மணியளவில் போகாரோ வந்தடைந்த அவர், அங்கிருந்து காரில் புருலியா சென்றார்.



    புருலியாவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யாநாத், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை கடுமையாக சாடினார்.

    'லஞ்ச-ஊழல் மிகுந்த சட்டவிரோத ஆட்சி இங்கு நடைபெற்று வருகிறது. ஊழல் செய்யும் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காகவும், ஊழல்கள் தொடரவும் மம்தா பானர்ஜி போராட்டங்களை நடத்தி வருகிறார். ஊழலில் சிக்கியுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனரை காப்பாற்ற இப்போது அவர் தர்ணா போராட்டம் நடத்துகிறார்.

    ஊழல்கள் தொடர்பான ரகசியங்கள் வெளிப்படாத வகையில் ஒரு மாநிலத்தின் முதல் மந்திரி தர்ணா நடத்துவது போன்ற வெட்கக்கேடான, அவமானகரமான, அரசியலமைப்புக்கு முரணான, ஜனநாயகவிரோதமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது’ எனவும் தனது பேச்சுக்கு இடையில் யோகி ஆதித்யாநாத் குறிப்பிட்டார். #Mamatasavingcorrupt #YogiAdityanath 
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெருக்களில் திரியும் பசுக்களை பராமரிக்க அரை சதவீதம் செஸ் வரி விதிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #UPGovt #Gaukalyancess #StrayCattle
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கடந்த மாதம் 27-ம் தேதி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, தொழுவங்கள், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதற்கு தேவையான செலவினங்களுக்காக சில பொருட்களின் மீது கூடுதலாக அரை சதவீதம் செஸ் வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்த வகை பொருட்களின்மீது கூடுதல் செஸ் வரி விதிப்பது என்பது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் இதுதொடர்பான அரசு அறிவிக்கை வெளியிடப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.



    இந்த அறிவிப்பின்படி மது வகைகள், சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வருமானத்தின் மீதான வரிவிதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், பசுக்களின் பராமரிப்புக்காக விவசாய விளைபொருள் விற்பனை கூடங்கள் தற்போது செலுத்திவரும் ஒரு சதவிகிதம் வரியும் இரண்டு சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

    அரசின் இந்த முடிவுக்கு அம்மாநிலத்தின் முன்னாள் ஆளும்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    கோசாலைகளை அமைத்து பசுக்களை பராமரித்து பாதுகாப்பது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையாக இருக்குமானால் இதை மத்திய அரசு நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தவில்லை? என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பசுக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடைமைகளில் ஒன்று. இதற்காக தனியாக புதிய வரியை திணித்து மக்களை ஏன் துன்புறுத்த வேண்டும்? என சமாஜ்வாதி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுதரி குறிப்பிட்டுள்ளார். #UPGovt #Gaukalyancess #StrayCattle
    உத்தரபிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். #BJP #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.



    அதோடு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, ஷெட், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். #BJP #YogiAdityanath
    உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில அரசின் தலைமை செயலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் சிலை நிறுவப்படும் என யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். #Vajpayeestatue #UPsecretariat #YogiAdityanath
    லக்னோ:

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் இன்று உத்தரப்பிரதேசம் மாநில அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தலைநகர் லக்னோ நகரில் நடைபெற்ற விழாவில் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கவர்னர் ராம்நாயக் உள்பட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    இவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-



    உத்தரப்பிரதேசம் மாநிலத்துடன் வாஜ்பாய் பலமான பிணைப்பை வைத்திருந்தார். இம்மாநிலத்தில் பல்ராம்பூரில் இருந்து தனது பொதுவாழ்வை தொடங்கிய அவர், லக்னோ தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 5 முறை பொறுப்பு வகித்துள்ளார்.

    தீன்தயாள் உபாத்யாய், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரிடமிருந்து அரசியல் பாடங்களை கற்ற வாஜ்பாய் நல்லாட்சி என்று சொல்லுக்கு அஸ்திவாரமாக விளங்கினார். அதனால்தான் இந்த மாநில அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் பல திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டியுள்ளோம். 

    அவரது நினைவுகளையும் புகழையும் நினைவுகூரும் வகையில் அரசு தலைமை செயலகத்தில் (லோக் பவன்) வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். #Vajpayeestatue #UPsecretariat #YogiAdityanath
    அனுமாரை தலித் என்று குறிப்பிட்ட உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில மந்திரி கடவுள்களை சாதியால் பிரிப்பது தவறு என்று குறிப்பிட்டார். #DivideGods #UPminister #YogiAdityanath
    லக்னோ:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட. இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.



    அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தலித் இயக்கமான ‘பீம் படை’ தலைவர் சந்திரசேகர், நாட்டில் உள்ள அனைத்து அனுமார் கோவில்களையும் இனி தலித்துகள் கைப்பற்ற வேண்டும். அந்த கோவில்களில் எல்லாம் தலித்துகளையே அர்ச்சகர்களாக பணியமர்த்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர், ‘கடவுள்களை சாதியின் பெயரால் பிரிவுப்படுத்துவது தவறு. இதனால் தற்போது அனுமார் கோவில்களை தலித் சமூகத்தினர் கைப்பற்றுவது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது’ என்று யோகி ஆதித்யாநாத்தின் பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்துள்ளார். #DivideGods #UPminister #YogiAdityanath

    உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்துக்காக கங்கை ஆற்றில் அமைக்கப்பட்ட முதல் முனையத்தை வாரணாசி நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். #PMmodiinVaranasi #Varanasidevelopmentschemes #multimodalterminal
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் 5,369.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின்கீழ் அமைந்துள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்நிலை சரக்கு கப்பல் போக்குவரத்து முனையத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    இந்திய நீர்வழி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி ஹல்தியா-வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் சுமார் 2 ஆயிரம் எடையுடன் சரக்கு கப்பல்கள் சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்த திட்டம் ஹல்தியா, சாஹிப்கஞ்ச், வாரணாசி ஆகிய பகுதிகளில் சரக்கு முனையங்கள் அமைத்து விரிவுப்படுத்தபடும். உ.பி. முதல்- மந்திரி யோகி ஆதித்யாநாத்  மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர். 

    மேலும்,  1,571.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வாரணாசி நாற்கர விரைவு நெடுஞ்சாலை மற்றும் பாபத்பூர்-வாரணாசி நெடுஞ்சாலைகளை மோடி இன்று மாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இந்த புதிய சாலைகள் மூலம் லக்னோ-வாரணாசி, அசாம்கர்-வாரணாசி, கோரக்பூர்-வாரணாசி, அயோத்தியா வாரணாசி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். வாகனங்களுக்கான எரிபொருள் செலவும் மிச்சமாகும் என கருதப்படுகிறது.

    வாஜித்பூர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும் மோடி இன்றிரவு டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PMmodiinVaranasi  #Varanasidevelopmentschemes #multimodalterminal
    அயோத்தி நகரில் ராமர் பெயரில் விமான நிலையமும் தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். #YogiAdityanath
    லக்னோ:

    கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் மற்றும் உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இன்று திறந்து வைத்தனர்.

    இந்த திறப்பு விழாவின்போது உரையாற்றிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத்  மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

    அயோத்திக்கு யாராலும் அநீதி இழைக்க முடியாது. நமது பெருமை, கவுரவம், பெருமிதம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையமும் தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். #Ayodhyamedicalcollege #KingDasharatha #KingDasharathamedicalcollege #YogiAdityanath
    உத்தரபிரதேசத்தில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் மிகப்பெரிய பிரம்மாண்ட சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.330 கோடி செலவிடப்படுகிறது. #UPGovt #RamaStatue #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி அயோத்திக்கு செல்ல உள்ளார்.

    அங்கு அவர் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார்.

    அந்த சமயத்தில் அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் மகேந்திரநாத் பாண்டே கூறியதாவது:-


    முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் துறவி ஆவார். ஆயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண புதிய திட்டம் ஒன்றை அவர் தயாரித்துள்ளார். அந்த திட்டத்தை அவர் வருகிற 6-ந்தேதி தீபாவளி தினத்தன்று அயோத்தியில் வெளியிட உள்ளார்.

    அதுமட்டுமின்றி அயோத்தியில் மியூசியம், கலை அரங்கம், விமான நிலையம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாகவும் முதல்-மந்திரி அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதியாகும்.

    உத்தரபிரதேசத்தில் ராமருக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டமும் உள்ளது. சரயூ நதி கரையில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்.

    இதற்காக ரூ.330 கோடி செலவிடப்படும். 36 மீட்டர் உயர பீடத்தில் ராமர் சிலை நிறுவப்படும். இதுபற்றிய அறிவிப்பையும் 6-ந்தேதி முதல்-மந்திரி வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்புகள் வெளியிட்ட பிறகு மிகப்பெரிய ரத யாத்திரை பிரசாரம் மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் அத்வானி நடத்திய ரத யாத்திரை போன்று இந்த யாத்திரை அமையும் என்று கூறப்படுகிறது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தேதியை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #UPGovt #RamaStatue #YogiAdityanath
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றம் செய்யும் முடிவுக்கு அம்மாநில மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்தது. #UPcabinet #Allahabadrename #Prayagraj
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒருசேர சங்கமிக்கும் பகுதியில் பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் நகரம் உள்ளது. அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத் ஐகோர்ட் ஆகியவற்றால் இந்நகரின் பெயரை அடிக்கடி செய்திகளில் காண முடியும்.

    அலகாபாத் நகரில் வரும் ஜனவரி மாதத்தில் கும்பமேளா நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் அங்குள்ள சாதுக்கள், ஜீயர்கள் மற்றும் பூசாரிகளுடன் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்துக்களின் ரிக் வேதம் மற்றும் ராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பியங்களில் இந்த இடம் பிரயாக்ராஜ் என குறிப்பிடப்பட்டுள்ளதால் அலகபாத் நகரத்தின் பெயரை  பிரயாக்ராஜ்  என மாற்றம் செய்ய விரும்புவதாக அவர்களிடம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார். இந்த முடிவுக்கு அவர்களும் இசைவு அளித்தனர்.


    இதைதொடர்ந்து, இன்று முதல்-மந்திரி தலைமையில் கூடிய மந்திரிசபை கூட்டத்தில் அலகாபாத் நகரத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றம் செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த நகரம் இன்று முதல் பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படும். இந்த முடிவின்மூலம், இந்திய கலாசாரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என அம்மாநில மந்திரி சித்தார்த்தநாத் சிங் தெரிவித்துள்ளார். #UPcabinet  #Allahabadrename #Prayagraj
    உத்தரபிரதேச மாநிலத்தில் குஷிநகர் மாவட்டத்தில் 5 பேர் பட்டினியால் பலியாகி உள்ள நிலையில் மக்கள் உணவு கிடைக்காமல் எலிக்கறியை உணவாக சாப்பிடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. #RatEating #UP #yogiAdityanath
    குஷிநகர்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது

    கடந்த மாதம் அம்மாநில அரசு தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடிய நிலையில் 5 பேர் பட்டினியால் பலியான பரிதாப தகவல் வெளியாகி உள்ளது.

    அங்குள்ள குஷிநகர் மாவட்டத்தில் ‘முஷாகர்ஸ்’ எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் தான் வறுமை காரணமாக கடந்த மாதம் பட்டினியால் இறந்து உள்ளனர். சோன்வா தேவி என்பவரின் இரண்டு மகன்கள் பட்டினியால் பலியாகி உள்ளனர். சகோதரர்களான அவர்களுக்கு 22 மற்றும் 16 வயது ஆகிறது.

    இதேபோல மேலும் 3 பேரும் பட்டினியால் இறந்துள்ளனர்.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதன் காரணமாக எலிக்கறியை உணவாக சாப்பிடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் ‘முஷாகர்ஸ்’ இன மக்கள் 2.6 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இதில் 97 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்கிறார்கள்

    இதற்கிடையே பட்டினி சாவை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-



    பசியால் 2 சகோதரர்கள் சாகவில்லை. அவர்கள் காச நோயால் இறந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தப்படும்

    முஷாகர்ஸ் இனமக்களுக்கு எங்களது அரசு வேலை மற்றும் வீடுகள் வழங்கி உள்ளது. அந்த குடும்பத்தினருக்கு ரேசன் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார். #RatEating #UP #yogiAdityanath
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குரு பூர்ணிமா தினத்தன்று முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் முன் மண்டியிட்டு சீருடையுடன் ஆசிபெற்ற போலீஸ்காரர் படம் வைரலாக பரவி வருகிறது. #UPcop #YogiAdityanath #YogiAdityanathblessings
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் முன்னர் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் ஆலயத்தின் மடாதிபதியாகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில்,  குரு பூர்ணிமா நாளான நேற்று யோகி ஆதித்யாநாத் கோரக்பூர் சென்றிருந்தார். அவரிடம் ஏராளமானவர்கள் ஆசி பெற்றனர். அவ்வகையில், காவல்துறையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பிரவோன் குமார் என்பவர், யோகி ஆதித்யாநாத் முன்னர் மண்டியிட்டு அமர்ந்து ஆசி பெறும் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.



    இதேபோல், யோகி ஆதித்யாநாத்துக்கு மாலை அணிவிக்கும் படத்தையும், திலகம் அணிவிக்கும் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவிவரும் நிலையில், இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் இருவேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

    கோரக்நாத் ஆலய மடாபதி என்னும் முறையில்தான் குரு பூர்ணிமா தினத்தன்று அந்த காவலர் ஆதித்யாநாத்திடம் ஆசி பெற்றதாக ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    அதேவேளையில், அவர் ஆசி பெற்றதில் தவறில்லை. ஆனால், கண்ணியத்துக்குரிய காவல்துறை சீருடையுடன் அவர் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது ஏற்புடையதல்ல என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். #UPcop #YogiAdityanath #YogiAdityanathblessings
    ×